TNPSC - குரூப்-4 பதவியில் மட்டும் 5,255 காலி பணியிடங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச்சில் தேர்வு
திருத்தப்பட்ட ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 4 பதவியில் மட்டும் 5,255 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மார்ச் மாதம் தேர்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேர்வுக்கான கால அட்டவணையை முன்னரே வெளியிடுவது வழக்கம்.
அதன்படி 2022ம் ஆண்டுக்கான ஓராண்டு கால அட்டவணை கடந்த 7ம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இந்த நிலையில் எவ்வளவு பணியிடங்கள் அடுத்த ஆண்டில் நிரப்பப்படுகின்றது என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணையை தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிட்டுள்ளது. அந்த கால அட்டவணையின்படி அடுத்த ஆண்டில் மட்டும் 32 துறைகளுக்கான தேர்வு நடைபெறுகிறது.
குரூப் 2 பதவியில் 101 பணியிடங்கள், குரூப் 2 ஏ(நேர்முக தேர்வு அல்லாத பதவி) 5,730 பதவிகள் நிரப்பப்படுகின்றது. இத்தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படுகிறது. குரூப் 4 பதவியில் அடங்கிய(குரூப் 4, விஏஓ) பதவியில் 5,255 காலி பணியிடங்கள் நிரப்படுகின்றது. இத்தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் வெளியிடப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவிகளான துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகிறது.
ஒருங்கிணைந்த இன்ஜினியர் சர்வீஸ் பதவியில் 167 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதமும், தமிழக அரசின் நீதித்துறையில் சிவில் நீதிபதி பதவியில் 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதமும். ஜெயிலர்(பெண்கள்), உதவி ஜெயிலர்(ஆண்கள்) 53 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதமும், ஒருங்கிணைந்த நூலகர் பதவியில் 63 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிசம்பர் மாதமும், மீன்வளத்துறை ஆய்வாளர் 59 பணியிடங்கள்,
மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பதவியில் 11 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமும் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதே போல தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையில் அசிஸ்டென்ட் சிஸ்டம் இன்ஜினியர், அசிஸ்டென்ட் சிஸ்டம் அனலைஸ் பதவியில் 53 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதமும் வெளியாகும் என்று டிஎன்பிஸ்சி தெரிவித்துள்ளது.
No comments: