274 VAO பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் அறிவிப்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:
* சென்னை மாவட்டத்தில் மாதவரம் வட்டம், கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டம், கரூர் மாவட்டத்தில் கடலூர் வட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டம் ஆகிய வட்டங்களில் சிறப்பு வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பணியிடங்கள் ஆண்டொன்றுக்கு ரூ.1.11 கோடி செலவில் தோற்றுவிக்கப்படும்.
* கிராம நிர்வாக அலுவலர்கள் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இச்சேவைகள் மக்களை விரைந்து சென்றடைய மாவட்டங்களில் 274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்.
* பழுதான நிலையில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பதிலாக புதிதாக ரூ.50.60 கோடியஇல் அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.
* பேரிடர்களின் போது அவசர கால எச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் தகவல் மையங்களாக செயல்படும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவது அவசியமாகிறது. எனவே, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த 38 மாவட்டங்களில் அவசர கட்டுப்பாடு மையங்கள் ரூ.1.50 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும்.
* தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் திறன்களை மேம்படுத்த ரூ.2.47 கோடி செலவில் மீட்பு வாகனங்கள் வாங்கப்படும்.
* பேரிடர் தொடர்பான பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை மையம், பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு தகுதி மையமாக தரம் உயர்த்தப்படும்.
* பொதுமக்களுக்கு விரைந்து சேவைகள் அளித்திட நிலச்சீர்திருத்த ஆணையரகத்தில் மின்னணு அலுவலகப் பணி மற்றும் இணையவழி சேவைகளை நடைமுறைப்படுத்திட கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
* நகர்ப்புற புல வரைப்படம் இணையவழியில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்படும்.
* சென்னை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தில் புவியியல் தகவல் அமைப்பு பிரிவு ரூ.14.22 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
* தேசிய புவி தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் மற்றும் சென்னை அண்ணா பல்கலை இணைந்து நில அளவை துறையின் முதுநிலை அலுவலர்களுக்கு புவியியல் தகவலமைப்பு குறித்த பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.
* சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனரகம் மற்றும் விருதுநகர், கோவை, நாமக்கல், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள மாவட்ட நில அளவை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.73.29 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
No comments: